பங்களாதேஷ் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.
இந்த நிலையில், பல தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், சுமார் 20 வாக்களிப்பு நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மைய நாட்களாக, ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன, இதில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 2,000 ஆதரவாளர்கள் வரை கைது செய்யப்பட்டனர்.
300 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளுக்காக இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
சுயேட்சை வேட்பாளர் மரணமடைந்ததால் 299 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாக்களிப்பு நிலைய பாதுகாப்பிற்காக 7 லட்சம் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் கண்காணிப்பில் 120 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.