”இந்தியாவில் இருந்து கீரி சம்பா இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால், தேசிய நெற்செய்கையாளர் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும்” என நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”14 மாதங்களுக்கு தேவையான அரிசி இந்த போகத்தில் கிடைக்கும் என விவசாய அமைச்சரும்,விவசாய திணைக்களமும் தெரிவித்துள்ளன.
இவ்வாறு இருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து கீரி சம்பா இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தேசிய நெற்செய்கையாளர் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரியை கிலோவுக்கு 65 ரூபாயில் இருந்து 1 ரூபாய் வரை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால்,பெரும் போகத்தில் நெல் விலை குறைவடைந்து நியாயமான விலைக்கு நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும்.
வரி குறைப்பால் பாரிய அளவில் அரிசி தொழிற்சாலை உரிமையாளர்களே பலனை அடைவர். இதன் மூலம் நுகர்வோரும் விவசாயிகளுமே மிகவும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.