காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தியுள்ளதாக தென்னாபிரிக்கா தொடுத்துள்ள வழக்கை ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இஸ்ரேல் இனப்படுகொலையை புரிந்துள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் காசாவில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஒரு குற்றவியல் விசாரணை இல்லை என்றாலும் சர்வதேச நீதிமன்றம் இனப்படுகொலை குற்றச்சாட்டு தொடர்பாக தனது கருத்தை மட்டுமே வழங்கவுள்ளது.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் பாலஸ்தீனிய தேசிய, இன மற்றும் குழுவின் கணிசமான பகுதியை அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தென்னாபிரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
எவ்வாறாயினும் இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என கூறி இஸ்ரேல் அதனை கடுமையாக நிராகரித்துள்ளது.
இந்த விசாரணை இடம்பெற்றுவரும் சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று பலஸ்தீனக் கொடிகளை ஏந்தியபடி நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேநேரம் காசாவில் பணய கைதிகளாக பிடிபட்டுள்ளவர்களின் படங்களை காட்சிப்படுத்தி இஸ்ரேலிய ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இன்றையதினம் தென்னாப்பிரிக்கா தனது வாதத்தை முன்வைக்கும் அதேவேளை இஸ்ரேல் நாளையதினம் தனது தரப்பு வாதத்தை முன்வைக்கவுள்ளது.