பனிமூட்டம் காரணமாக விமானம் தாமதமாக புறப்படும் என அறிவித்த விமானியை பயணியொருவர் தாக்கிய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி, டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து கோவாவுக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானம் பனிமூட்டம் காரணமாக தாமதம் ஆனது. பல மணி நேரம் விமானம் தாமதம் ஆனதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதற்கிடையே, விமானம் தாமதமாக புறப்படும் என பயணிகளுக்கு அறிவித்துக் கொண்டிருந்த விமானியை கடைசி இருக்கையில் இருந்த பயணி ஒருவர் வேகமாக வந்து கடுமையாகத் தாக்கத் தொடங்கியுள்ளார்.
இதைப்பார்த்து பயணிகளும் விமான பணியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையயடுத்து உடனடியாக குறித்த நபர் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்ட நிலையில், விமானி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் பொலிஸ் நிலையத்திலும் புகாரளித்துள்ளனர்.
இதேவேளை விமானியைப் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், குறித்த பயணி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இனிமேல் விமானங்களில் பயணம் செய்ய முடியாதபடி அவரை விமானத்தில் செல்ல தடை விதிக்க வேண்டும் எனவும் இணைய வாசிகள் தெரிவித்துள்ளனர்.