சர்வதேச ரீதியில் நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவை தற்போது எழுந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உகண்டாவின் கம்பாலா நகரில் நேற்று ஆரம்பமான G 77 மற்றும் சீனா 3ஆவது தென்துருவ நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
“வளர்ந்து வரும் நாடுகளின் மிகப்பெரிய குழுவாக ஒன்றிணைந்து செயல்படுவதும், நாம் எதிர்கொள்ளும் பல சவால்களை சமாளிக்க உலகளாவிய தெற்கின் நிலைப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்துவதும் இன்றியமையாதது.
உலக நிதிக் கட்டமைப்பை முன்னெப்போதையும் விட இப்போது மறுசீரமைக்கப்பட வேண்டிய அவசரத் தேவை உள்ளது. பரிஸ் கிளப் மற்றும் லண்டன் கிளப் ஆகியவற்றால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட உலகத்திற்கே நவீன சர்வதேச கடன் தீர்வு மாதிரி மிகவும் பொருத்தமானது.
இன்று, உலகளாவிய கடன், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளின் கடன், பரிஸ் கிளப் மற்றும் சர்வதேச பிணைமுறிச் சந்தையினால் கட்டுப்படுத்தப்படுகிறது.
கையிருப்பிலிருக்கும் நிதி வளங்களை கடன் சேவைகளாகப் பெற்றுக்கொள்ளும் போது பொதுத் தேவைகள், மனித அபிவிருத்திச் செயற்பாடுகள் ஆகியவற்றுக்குத் தேவையான செலவுகளுக்கான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. இதனால் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இந்த விடயம் தாக்கம் செலுத்துகிறது.
தற்போது காணப்படும் பொது வரைவு விரைவில் கடன் தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு போதுமானதாக இல்லை.
மேற்படி வரைவு மற்றும் நடைமுறையில் காணப்படும் பொருத்தமற்ற தன்மைகள் காரணமாக இலங்கை உள்ளடங்களாக நமது நாடுகள் அனைத்தும் அரச கடன் நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கான முயற்சிகளை தாமதிக்க வேண்டியுள்ளது.
நாம் உலக பொருளாதாரம் மற்றும் முதலீடுகளின் இலகுத் தன்மை, உயர்ந்தபட்ச செயற்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். G 77 அமைப்பு இந்த செயற்பாடுகளை பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.