மின்சார சபையின் எந்தவொரு தனிநபரின் இராஜினாமாவையும் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபைக்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்தல் விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இலங்கை மின்சார சபைக்கான அனைத்து நிலுவைத் தொகைகளையும் வசூலிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
மின்சார சபை சீர்திருத்தங்கள், செலவுக் குறைப்பு பொறிமுறைகள், அடையாளம் காணப்பட்ட மின் திட்டங்களை செயல்படுத்துதல், டிஜிட்டல் கட்டண தளம் மற்றும் கட்டண வசூலிப்பு மற்றும் மின்சார சபை சேவைகளுக்கு இடையூறு விளைவித்த நபர்களுக்கு எதிரான ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின்சார சபை மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மின்சார சபை ஊழியர்கள் 66 பேரின் சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 5,000 பேர் சேவையில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளதாக மின்சார சபை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மின்சார சபையின் எந்தவொரு தனிநபரின் இராஜினாமாவையும் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.