குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜுன் மாதங்களில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, தண்டனைச் சட்டக் கோவையில் புதிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.
குறிப்பாக வன்புணர்வுக் குற்றம் தொடர்பாக சட்டத்திருத்தம் தொடர்பான யோசனை மற்றும் வன்புணர்வு பற்றி சட்டத்தில் காணப்படுகின்ற குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான யோசனைகள் 2016 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டன.
அந்தவகையில், ஆண் பிள்ளைகளை வன்புணர்வு செய்தலை குற்றச் செயலாக்குவதற்கான யோசனையும் 2016 ஆண்டு அமைச்சரவை கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது அதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு, சட்ட வல்லுணர்களினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கவும் அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்த படிமுறைகளுக்கான யோசனைகளை, நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்த நிலையில் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.