இணைய பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையாது இலங்கையின் மனித உரிமைகள் மீதான பாரிய தாக்குதல் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இணைய பாதுகாப்பு சட்டமூலமானது கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்கும் கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும் அரசாங்கத்தினால் பயன்படுத்தக்கூடிய புதிய ஆயுதம் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெற்று, நாட்டிலுள்ள அனைவரினதும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
இந்த சட்டமூலத்தின் பெரும்பாலான பகுதிகள் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு உட்பட்டவையல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னரும் அதன் பின்னரும் மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதனூடாக, தமது சர்வதேச மனித உரிமை கடப்பாடுகளை நிலைநாட்டுவதற்கான அரசியல் விருப்பத்தை அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டுமெனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.