நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்கின்ற அதேநேரம்; வீதி விபத்துக்களின் எண்ணிக்கையும் அதனால் அப்பாவிகளின் உயிர்கள் காவு கொள்ளப்படும் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றமைக்கு காரணம் சட்ட ஒழுங்குகளை கண்காணிக்கும் தரப்பிடம் மேலோங்கியுள்ள லஞ்ச ஊழல் செயல்களே ஆகும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் அதிகரிப்பதற்கான உண்மையான காரணத்தை அரசாங்கம் இதுவரை கண்டறியவில்லை அதற்கான முயற்சிகளும் இடம்பெறவில்லை காரணம் ஆட்சித் தரப்பில் உள்ள ஊழல் மோசடிகள் மறைக்கப்படுவதற்காக இரண்டாம் மட்ட லஞ்ச ஊழல்கள் தடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு லஞ்ச ஊழல் மோசடிகளே பிரதான காரணம் ஆகும்.
வீதி விபத்துக்கள் அதிகரிப்பதில் முறையற்ற வகையில் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுதல், போதையில் வாகனம் செலுத்துதல், தண்டனைக் குரிய குற்றச் செயல்களுடன் போக்குவரத்து கண்காணிப்பு பொலிசாருக்கு லஞ்சம் வழங்கி வீதிகளில் வாகனங்கள் செலுத்தும் நபர்களினால் நாளாந்தம் விபத்துக்கள் அதிகரிக்கின்றன ஆகவே நாட்டில் குற்றச் செயல்கள் மற்றும் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு லஞ்ச ஊழல் மோசடிகளே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.