இணைய பாதுகாப்புச் சட்டமூலத்தின் ஊடாக மக்களின் வாயை மூட அரசாங்கம் தீவிரமாக முயற்சி செய்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர விசனம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”கடந்த காலங்களில் நாட்டில் சமூக ஊடகங்கள் பாரிய சேவைகளை ஆற்றியுள்ளன. ஜனாதிபதி முதற்கொண்டு ஒட்டுமொத்த அரசாங்கமே சமூக ஊடகங்களினால் விரட்டியடிக்கப்பட்டது.
அரசியல்வாதிகள் செய்யும் அனைத்து குற்றச்செயல்களும் இதனால் வெளியே வந்தன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான செயற்பாடுகள், மத வெறுப்புப் பிரசாரங்களை கட்டுப்படுத்தவே இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
ஆனால், இவற்றை கட்டுப்படுத்த போதுமான சட்டங்கள் தற்போதும் நாட்டில் உள்ளன. இந்த நிலையில், யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையிலும் பலரின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது ஒருவரேனும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழக்கிறார்.
இதற்கு ஐ.நா. எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நிலையில், ஐ.நா. தெரிவிப்பதை கவனத்தில் கொள்ளப்போவதில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அப்படியென்றால், ஐ.நா. அமைப்பிலிருந்து இலங்கை விலகவேண்டும். அமைச்சரின் இந்த முட்டாள் தனமான கருத்தினால், நாட்டு மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில், முதலில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” இவ்வாறு ஹிருணிகா தெரிவித்துள்ளார்.