பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை கண்டித்து பலுசிஸ்தானில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பிரதான கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராக மாஜி கிரிக்கெட் அணி கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் பதவி வகித்து வந்தார். இவர் தனது பதவி காலத்தில் அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம்; தீர்ப்பளித்திருந்தது.
இதை கண்டித்து பாகிஸ்தான் தெஹ்ரிக் -இ- இன்சாப் கட்சி ஆதரவாளர்கள் பலுசிஸ்தான் மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தான் தெஹ்ரிக் -இ- இன்சாப் கட்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்களால் பதட்ட நிலை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு எதிர்வரும் பெப்ரவரியில் பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.