சிங்கராஜா வன வலயத்திற்குள் வீதி மற்றும் குளங்களை அமைப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சுற்றாடல் நீதி மையம் சமர்ப்பித்த மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, வனஜீவராசிகள் அமைச்சர் மற்றும் சுற்றாடல் அமைச்சர் ஆகியோர், பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஆரம்ப ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இதன்படி மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள வனஜீவராசிகள் அமைச்சர், சுற்றாடல் அமைச்சர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம், வனப் பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் அழைப்பானை விடுத்துள்ளது.
கடந்த ஆட்சியில் சுற்றுச்சூழல் சிங்கராஜா வன பகுதியில் புதிய வீதி அமைக்கவும், ஏற்கனவே உள்ள வீதியை அகலப்படுத்தவும், குளங்கள் கட்டும் திட்டத்தை செயல்படுத்தவும் தயாராக இருந்ததாக மனுதாரர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டால், சிங்கராஜா வனப் பகுதியின் பல்லுயிர் பெருக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எனவே, இத்திட்டத்தை செயல்படுத்துவதை தடுக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் மனுவில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.