ஜனாதிபதி, பிரதமர், அல்லது நாடாளுமன்றம் பணிப்புரை விடுத்தால் மாத்திரமே யுக்திய நடவடிக்கை நிறுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களை முழுமையாக ஒழிக்கும் வரையில் இந்த யுக்திய நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம்.
நாட்டிலுள்ள சில சத்தம் போட்டாலும் ஒட்டுமொத்த நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு இந்த யுக்திய நடவடிக்கையை தொடருமாறு நான் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இந்த நடவடிக்கையை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு மகா சங்கத்தினரும், தொண்ணூற்று ஒன்பது வீதமான நாட்டு மக்களும் கோருகின்றனர்.
எனவே ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது நாடாளுமன்றமோ இதனை நிறுத்துமாறு அறிவிக்கும் வரையில் இதனை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்” என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மேலும் தெரிவித்தார்.