“நாட்கூலி தொழிலாளர் என்ற தாழ்நிலை நிலையில் இருந்து, பெருந்தோட்ட மக்களை நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக மாற்றுவோம்” என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக கூறி எம்முடன் உடன்பாட்டில் கையெழுத்து இட்டுள்ளதுடன் இது எமது த.மு.கூவின் தூரநோக்கு சிந்தனையின் வெற்றி எனவும் அவர் தெரிவித்தார்.
ஜக்கிய மக்கள் சக்தி அரசு உருவாகுமானால், அப்போது, எமது மக்கள் தொடர்பாக முன்னெடுக்ககூடிய நலவுரிமை திட்டங்கள் என்ன, என்பதுபற்றிய எழுத்து மூலமான உள்ளக சமூகநீதி உடன்பாடு இதுவாகும். இது தேர்தல் ஒப்பந்தம் அல்ல எனவும் தெரிவித்தார்.
இந்நாட்டில் வாழும் 15 இலட்சம், மலையக தமிழ் மக்கள் என்ற இன அடையாளத்துக்குள், சரிபாதி ஜனத்தொகை இன்னமும் பெருந்தோட்டங்களில் வாழ்கிறார்கள். இந்நாட்டின் ஏனைய மக்களுடன் ஒப்பிடும் போது, இந்த பெருந்தோட்ட மக்கள், சமூக பொருளாதார வளர்ச்சியில் இந்நாட்டிலேயே பின்தங்கியவர்கள்.
இதற்கு காரணம், மலைநாட்டு அரசியல்வாதிகள் மட்டுமே என்ற கவர்ச்சிக்கரமான பிரசாரம் முன்னேடுக்கப்படுகிறது. இது வரலாற்றை திட்டமிட்டு மூடி மறைக்கும் சூழ்ச்சி. இந்த கண்ணாம்பூச்சி கவர்ச்சி கதையில் நாம் மயங்கி விடக்கூடாது. மலைநாட்டு அரசியல்வாதிகள் மீது பெரும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றில் உண்மைகளும் உள்ளன. ஆனால், எமது மக்களின் குறை வளர்ச்சிக்கு முதல் மூன்று காரணங்கள், பேரினவாதம், இந்திய அரசு, இங்கிலாந்து அரசு ஆகியவை ஆகும்.
சுதந்திரம் பெற்றவுடன் எமது குடியுரிமை, வாக்குரிமைகளை பறித்து எமக்கு இன்று காணி, கல்வி, சுகாதாரம் ஆகிய உரிமைகள் முழுமையாக இல்லாமல், எம்மை பெருந்தோட்ட அமைப்புக்குள்ளே இரண்டாந்தர பிரஜைகளாக வைத்திருப்பது, பேரினவாதம் ஆகும்.
எம்மை கேட்காமலே, எம்மில் பெரும்பான்மையோரை நாடு கடத்தி, எம்மை அரசியல்ரீதியாக பலவீனப்படுத்தியது, இந்திய அரசு ஆகும்.
எம்மை இங்கே அழைத்து வந்து, எமது உழைப்பில் நன்கு சம்பாதித்து விட்டு, எம்மை அம்போ என விட்டு ஓடியது, இங்கிலாந்து அரசு ஆகும்.
இந்த வரலாற்றால், ஏற்பட்டுள்ள, தாழ்நிலைமைகளில் இருந்து வெளியே வருவது சுலபமான காரியம் அல்ல.
இந்த மூன்றுக்கும் பிறகுதான், மலைநாட்டு அரசியல் கட்சிகளின் பொறுப்பு வருகிறது. அதிலும், தமிழ் முற்போக்கு கூட்டணி, எட்டு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு, ஒரே ஒருமுறை மட்டும் ஆட்சியில் இருந்த முற்போக்கு அரசியல் இயக்கம் ஆகும்.
தேசிய, சர்வதேசிய அரங்குகளில் எமது பிரச்சினைகளை காத்திரமாக எடுத்து பேசி, முன் வைத்து, தீர்வு தேடும் இயக்கம், எமது கட்சியாகும். அதன் ஒரு அங்கம்தான், “நாட்கூலி தொழிலாளர் என்ற தாழ்நிலை நிலையில் இருந்து, பெருந்தோட்ட மக்களை நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக மாற்றுவோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.