செங்கடலில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு தடை விதித்து ஏமனின் ஹௌதி போராளிகள் உத்தரவிட்டுள்ளனர்.
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஹௌதி போராளிகள், தங்கள் இராணுவ பிரச்சார நடவடிக்கையை வலுப்படுத்தும் முயற்சியாக இதனை அறிவித்துள்ளனர்.
அதன்படி கப்பல் காப்பீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு குறித்த தடை குறித்த முறையான அறிவிப்பை ஹௌதியின் மனிதாபிமான செயற்பாட்டு ஒருங்கிணைப்பு நிலையம் நேற்று அனுப்பியுள்ளது.
இந்த தடை, தனியார் அல்லது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், இஸ்ரேல், அமெரிக்க மற்றும் பிரித்தானியாவின் கொடிகளின் கீழ் பயணிப்பதை தடுக்கும் என கூறப்படுகின்றது.
செங்கடலில் ஹௌதி போராளிகள் சில கப்பல்களை குறிவைத்து நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் எதிர்த்தாக்குதல் நடத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காசாவில் கடந்த நான்கு மாதங்களில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேரைக் கொன்ற இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை நிறுத்தும் வரை தாக்குதல் தொடரும் என ஹௌதி போராளிகள் அறிவித்துள்ளனர்.