இலங்கையின் கடல்சார் பாதுகாப்புக்கு அமெரிக்கா பூரண ஆதரவை வழங்குவதாக அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகைத் தந்துள்ள அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கு அமெரிக்கா ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதாக ரிச்சர்ட் ஆர்.வர்மா குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பை ஒரு பிராந்திய கப்பல் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கு 553 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுவியை அமெரிக்கா வழங்கவுள்ளதாகவும் ரிச்சர்ட் ஆர்.வர்மா, ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சிக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை ரிச்சர்ட் ஆர்.வர்மா பார்வையிட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.