ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகள் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக அமையக்கூடாதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமானது.
இந்நிலையில் நேற்றைய கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி உரையாற்றியிருந்தார்.
இலங்கை தற்போது கடுமையான தடைகளை எதிர்நோக்குகின்ற போதிலும் மக்களிற்கு பயனளிக்ககூடிய ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும் இதன்போது அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தீர்மானங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையையும் அரசாங்கம் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இவ்வாறான பொறிமுறைகள் ஆக்கபூர்வமற்றவை என்பதுடன், அவை எதிர்மறையானவை என்றும் அலி சப்ரி குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக கேரிக்கப்படுகின்ற ஆதாரங்கள், மனித உரிமைப் பேரவை ஸ்தாபிக்கப்பட்ட கொள்கைகளிற்கு எதிரானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை காசா எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அணுகுமுறை தொடர்பாகவும் அமைச்சர் அலி சப்ரி இதன்போது குறிப்பிட்டிருந்தார்.