மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுகின்ற நிலையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் குறைக்குமாறு வர்த்தகர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டபோது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன. ஆனால் தற்போது மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
எனவே உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பொதுச் சேவை வர்த்தகர்கள், பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகளை குறைப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. மின்சார கட்டணத்தைக் குறைப்பதன் பிரதிபலன்
நிச்சயமாக மக்களுக்குச் சென்றுடையவேண்டும். மின் கட்டணத்தை குறைப்பதற்கு முன்னர் உணவக உரிமையாளர்கள் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துவதாக விளம்பரம் செய்தனர்.
தற்போது மின்சார கட்டணம் குறைத்துள்ளபோது வர்த்தகர்கள் பொருட்களின் விலையை குறைக்காது தந்திரமாக செயற்படுகின்றனர். உணவகங்களில் உணவுப் பொருட்களின் தற்போது விலை குறைப்பு போதாது.
உணவகங்கள் மற்றும் தகவல் தொடர்பு போன்றவற்றை உள்ளடக்கிய பொதுநோக்கு பிரிவின் மின் கட்டணம் 24 சதவீதம் குறைக்கப்பட்டது. இதன்படி, பொது நோக்கத்தின் கீழ் வரும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்படவேண்டும். அவை வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக காட்சிப்படுத்தவேண்டும்” இவ்வாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.