உலகிலே அனுஷ்டிக்கப்படுகின்ற அல்லது கொண்டாடப்படுகின்ற ஒவ்வொரு தினமும் அத்தினத்துக்கான விடயப்பொருள் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தும் வகையிலேயே ஆரம்பிக்கப்பட்டன.
அந்தவகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற சர்வதேச மகளிர் தினத்தின் முக்கிய நோக்கமும் மகளிரைக்கொண்டாடி மேன்மைப்படுத்துவதோடு நின்றுவிடாது அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான உந்துதல்களை ஏற்படுத்துவதற்குப் பங்களிப்பளிப்புச் செய்வதுமாகும்.
இத்தினமானது சர்வதேச அளவில் அனைவரதும் கவனக்குவிப்பைக் கொண்ட ஒரு தினமாகக் காணப்படுகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் சாதனைகளைக் கௌரவிப்பதன்மூலம் அவர்களின் பெறுமதியை அவர்களே உணரக்கூடிய ஒரு வாய்ப்பை அது வழங்குகிறது.
பெண்களின் சாதனைகளைப் போற்றுவதன் மூலமும், பாலின சமத்துவம் தொடர்பான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், பெண்களின் உரிமைகளுக்காக வாதிடுவதன் மூலமும் அனைத்துப் பெண்களுக்கும் அதிகாரம் மதிப்பு, போன்றவற்றைப் பெற்றுக்கொடுக்க, சமூகத்திலுள்ள அனைவரும் உழைக்க முடியும்.
‘பெண்கள் சமூகத்தை உருவாக்குபவர்கள் சமத்துவம் என்பது அவர்களது உரிமை. சம உரிமையென்பது சிறப்பு உரிமையல்ல. பெண்களின் உரிமைகளை விட்டு விடாதீர்கள். பெண்களுக்காக எழுந்து நில்லுங்கள், வலுவான பெண்கள் வலுவான உலகம். ஒவ்வொருவரும் அவளுடைய கதையைக் கொண்டாடுங்கள்’ என்ற தொனிப்பொருளில் இவ்வருட மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது.
பாலின பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவந்து பாலின சமத்துவத்தை அடைவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இந்தநாள் அமைகிறது. எந்த வயதினராக இருந்தாலும் அவரவர் சமூகப் பொறுப்புக்களை உணர்ந்து செயற்படும்போது சமூகமேம்பாடு உறுதுணையாகின்றது. பாரதிகண்ட புதுமைப்பெண்களாய் இம்மண்ணை அலங்கரிக்கும் பெண்களை வாழ்த்தி மகளிர் தினத்தைக் கொண்டாடி மகிழ்வோம்.