கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவனும் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின், தெற்கு ஒட்டாவாவிலுள்ள பார்ஹேவன் புறநகரில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இந்த பயங்கரம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலைச் சம்பவத்தில் குறித்த வீட்டில் வசித்துவந்த தாய் மற்றும் பிள்ளைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்தவகையில், 35 வயதுடைய தர்ஷினி பண்டாரநாயக்க எனும் தாய், அவரது 7 வயது பிள்ளையான இனுக விக்ரமசிங்க, 4 வயர் பிள்ளையான அஷ்வினி விக்ரமசிங்க, 2 வயது பிள்ளையான ரியானா விக்ரமசிங்க, 2 மாதக் குழந்தையான கெல்லி விக்ரமசிங்க, மற்றும் குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரகோன் முதியன்சலாகே காமினி அமரகோன் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் நேற்றையதினம் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா (Febrio De-Zoysa) எனும் சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர், தனது 19 ஆவது பிறந்த தினத்தை படுகொலை செய்யப்பட்ட குறித்த குடுப்பத்தாருடன் இணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடியிருந்தாகவும் இவரும் இலங்கையிலிருந்து கனடாவுக்கு மாணவர் விசாவில் வருகை தந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் 5 பேர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பார்ஹேவன் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தப் படுகொலைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.