சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகளில் எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை வரவேற்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” 2022ஆம் ஆண்டு எவ்வாறான நிலைமை காணப்பட்டது என்பதை இன்று பெரும்பாலானோர் மறந்து விட்டனர். அவற்றில் சிலவற்றை நானும் மறந்து விட்டேன். அன்று எனக்கு இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு கூட ஒரு இடம் காணப்படவில்லை.
இறுதியில் பிரதம நீதியரசரிடம் அறிவித்து விட்டு விகாரையொன்றில் பதவிப்பிரமாணம் செய்தேன். அன்று நாடாளுமன்றத்தை சிலர் சுற்றி வளைப்பதற்கு சதித்திட்டம் தீட்டினர். இராணுவத்தினரால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இன்று அதனை அனைவரும் மறந்து விட்டோம். பொருளாதாரம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை எடுத்த போது ஜனநாயக விரோதமாக நான் செயற்படுவதாகக் கூறினர். தேர்தலைக் காலம் தாழ்த்தப் போவதாகவும், சர்வாதிகார ஆட்சி தலைதூக்கவுள்ளதாகவும் கூறினர்.
ஆனால் இந்தக் காலகட்டத்தில் என்னைப் பற்றி 2000க்கும் மேற்பட்ட கேலி சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.
சர்வாதிகார ஆட்சி என்றால் இவற்றுக்கு எவ்வாறு இடமளிக்கப்பட்டிருக்கும்? கடந்த 6ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் சிறந்த யோசனையொன்றை முன்வைத்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகளில் எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொள்ளுமாறு கோரினார். இதனை நான் வரவேற்கின்றேன். எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை செயற்படுத்துவதற்கு முற்படுவோம் என எதிர்தரப்பிற்கு அழைப்பு விடுகின்றேன்.
எதிர்வரும் திங்களன்று இது தொடர்பில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் சகல எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் என்று நம்புகின்றேன்.
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதை விரும்புகின்றேன்” இவ்வாறு ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.