காஸா மீது அமெரிக்க விமானப்படை வீசிய நிவாரண பொருட்கள் அகதிகள் முகாம் மீது விழுந்ததில் ஐவர் உயரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
காஸா சிட்டியின் ஷதி அகதிகள் முகாமில் பொதுமக்கள் உணவுக்காக வரிசையில் காத்திருந்தபோது, அமெரிக்க விமானப்படையினர் பரசூட் மூலம் நிவாரணப் பொருட்களை காஸாவில் தரையிறக்கின.
இதன்;போது, நிவாரண பொருட்களின் தொகுப்பு ஒன்று பரசூட் திறக்காததால் அதிவேகமாக கீழே விழுந்தது. அது அகதிகள் முகாமில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது விழுந்ததில் இந்த ஐவர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், பரசூட் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீசுவது பயனற்றது என்றும், நில எல்லை வழியாக நிவாரண பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டுமெனவும் ஹமாஸ் ஆயுதக்குழுவால் நிர்வகிக்கப்பட்டுவரும் காஸா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி, இஸ்ரேல் மீது காஸாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.
தாக்குதலை மேற்கொண்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253 பேரை காஸாமுனைக்கு பணய கைதிகளாக கடத்திச் சென்றனர். இதனையடுத்து, காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.
இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்தது. ஆனாலும், இன்னும் 130க்கும் மேற்பட்டோர் காஸாவில் பணய கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதலுக்கு பதிலடியாக காஸாமுனை மீது இஸ்ரேல் தொடர்ந்தும் போர் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திவரும் இந்த தாக்குதலில் காஸா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உட்பட 30 ஆயிரத்து 800 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல், மேற்குகரையில் நடந்த மோதலில் 424 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஸா முனையில் நடைபெற்றுவரும் போரால் அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.
காசாவில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
ஐ.நா. மூலம் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலும் தேவை அதிகரிப்பு காரணமாக காசாவில் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
எகிப்து, இஸ்ரேல் எல்லைகள் வழியாக காஸாவுக்கு லொறிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தன.
ஆனால், பணயக் கைதிகளை விடுவிக்காதவரை நிவாரண பொருட்களை கொண்டுச் செல்லும் லொறிகள் காஸாவுக்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, காஸாவுக்கு விமானம் மூலம் எகிப்து மற்றும் அமெரிக்கா நிவாரண பொருட்களை வழங்கின. எகிப்து விமானப்படை விமானங்கள் மற்றும் அமெரிக்க விமானப்படை விமானங்கள் காசா மீது உணவு, தண்ணீர், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீசி வருகின்றன.
இந்நிலையிலேயே மேற்குறிப்பிட்ட விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.