‘யுக்திய’ சோதனை நடவடிக்கையை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு பொது மக்களின் உதவியை நாடியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாட்டில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைக்கு உதவுவதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்காக விசேட தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 071 – 8598800 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது ops.narcotics@police.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக பொது மக்கள் விசேட நடவடிக்கை பிரிவுக்கு தகவல் வழங்க முடியும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவசர சேவை இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டவர்களின் அடையாளங்கள் இரகசியமாக பேணப்படும் என்றும் பொலிசார் அறிவித்துள்ளனர். இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 1101 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 1030 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவின் பட்டியலில் இருந்த 71 சந்தேக நபர்கள் உட்பட நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மொத்தம் 1101 சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.