மிளகு உள்ளிட்ட மேலும் சில வாசனைத் திரவியங்களை மீள் ஏற்றுமதிக்காக நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கு வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மிளகு, சாதிக்காய், மஞ்சள், இஞ்சி போன்ற இலங்கையில் வளர்க்கப்படும் சில வாசனைத் திரவியங்களை மீள் ஏற்றுமதிக்காக அதனை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் அண்மையில் வர்த்தமானி ஊடாக வெளியிட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர வர்த்தமானி அறிவித்தலுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டார்.
குறிப்பாக மீள் ஏற்றுமதிக்காக இந்த வாசனைத் திரவியங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது உள்ளூர் விவசாயிகளை பாதிக்கும் என்றும் எனவே உள்ளூர் வாசனைத் திரவியப் பொருட்களின் உற்பத்தி வீழ்ச்சியடையும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது உலகின் சிறந்த வசனைத் திரவியங்களின் வர்த்தக நாமங்களில் முதலிடத்தில் உள்ள இலங்கையில் வாசனைத் திரவியங்களின் தரத்தில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கும், மீள் ஏற்றுமதிக்காக வாசனைத் திரவியங்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கவேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை முன்வைத்தார். இந்நிலையில் குறித்த வர்த்தமானியை இடைநிறுத்த தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.