இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி, தீவகப் பகுதி தெற்கு வேலணைப் பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினால் இன்று யாழில் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பேரணியாக இந்திய துணைத்தூதரகம் வரை சென்ற போராட்டக்காரர்கள், யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
இதில், இந்திய அத்துமீறிய ரோலர் படகுகளினால் தொடர்ச்சியாக தங்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் இதுதொடர்பாக இந்திய அரச உயர் மட்டம் இதுவரை சாதகமான பதில் எதுவும் வழங்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தங்களின் மஜகருக்கான பதிலை இந்த மாதம் 25 ஆம் திதிக்கு முன்னர் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள போராட்டக்காரர்கள், அவ்வாறு நடக்காத சந்தர்ப்பத்தில் 25ஆம் திகதிக்கு பின்னர் மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இப் போராட்டத்தில் தீவகம் தெற்கு கூட்டுறவு சமாசங்களின் தலைவர் ஆறுமுகம், யாழ். மாவட்ட கிராமிய கடற்தொழிலாளர் கிராமிய கூட்டுறவு சங்கங்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம், யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ் உள்ளிட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.