லைகா நிறுவனத்தின் தலைவர், தமிழர் என்ற ஒரே காரணத்தினால்தான் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள பேரினவாத சக்திகள் அவருக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
இதே நிலைமை தொடர்ந்தால் இலங்கையை பொருளாதார ரீதியாக முன்னேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அவர்,
“இலங்கையைப் பொறுத்த வரையில் அதிகாரங்களைப் பரவலாக்கி மாகாணங்களுக்கு பூரணமான அதிகாரங்களைக் கொடுத்தால் இந்த நாட்டில் புலம்பெயர்தேசத்தில் உள்ள தனவந்தர்களும் தமிழர்களும், முதலீடு செய்வதற்குத் தயாராக உள்ளனர்.
அவர்களது முதலீடுகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் அவர்கள் எக்காரணம் கொண்டும் நாட்டில் முதலீடு செய்ய வரமாட்டார்கள். அவ்வாறு வருகின்ற ஒரு சிலரைக் கூட தமிழீழ விடுதலைப் புலிகளை பின்பற்றுபவர்கள் எனக் கூறும் அளவிற்குதான் இந்த நாட்டின் அரசியல்வாதிகள் உள்ளனர்.
ஸ்ரீலங்கா டெலிகொம்மை தனியார் மயப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் இதனை கொள்வனவு செய்ய ஒரு தமிழரான லைகா நிறுனத்தின் உரிமையாளர் முயற்சி செய்கின்றார்.
எனினும் அவர் தமிழர் என்பதற்காகவே அதனைத் கொடுக்கக் கூடாது என சில அரசியல் வாதிகள் எதிர்ப்பினை வெளியிடுகின்றனர். இவ்வாறான அரசியல் வாதிகளால் இந்த நாட்டை எக்காலத்திலும் முன்னேற்ற முடியாது” என சுட்டிக்காட்டியுள்ளார்.