அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இவரது பதவி காலம் நிறைவடையவுள்ள நிலையில், எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவசியமான பிரதிநிதிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை நான்கு மாநிலங்களிலும் அமெரிக்க பிரதேசமொன்றிலும் வாக்கெடுப்புகள் இடம்பெற்றன. வெளிநாடுகளில் வாழும் ஜனநாயக கட்சியினரும் வாக்களித்தனர். இதனை தொடர்ந்து 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களையே மீண்டும் அமெரிக்க மக்கள் எதிர்கொள்கின்றனர்.
இரண்டு கட்சிகளினதும் மாநாட்டில் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும். ட்ரம்பின் ஆபத்து முன்னர் எப்போதையும் விட தற்போது அதிகமாக உள்ள நிலையில் தான் மீண்டும் போட்டியிடுவதற்கு வாக்காளர்கள் ஆதரவு வழங்கியுள்ளமை குறித்து பெருமிதம் அடைவதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சாதகமான பொருளாதார நிலையை சுட்டிக்காட்டியுள்ள ட்ரம்ப் அமெரிக்கா மீண்டும் பழைய வலிமையான நிலைக்கு திரும்பும் நிலையில் உள்ளது ஆனால் அமெரிக்கா அதன் ஜனநாயக எதிர்காலம் குறித்த சவால்களை எதிர்கொள்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக இன்று தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.