சர்வதேச நாணயநிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு நாம் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கு நாங்கள் தெளிவுபடுத்தினோம்.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் காரணமாக அதிகரித்துள்ள வரி மற்றும் அதனால் மக்கள் பாதிப்படைந்துள்ள விடயங்கள் தொடர்பாகவும் நாங்கள் பேசியிருந்தோம். சர்வதேச நாணயநிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு நாம் எதிப்பினை தெரிவிக்கவில்லை. ஆனால் மக்களை பாதிப்படையச் செய்யும் விடயங்கள் நீக்கப்பட வேண்டும்.
நாட்டின் நெருக்கடி நிலையை நிவர்த்தி செய்வதற்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். சர்வதேச ரீதியில் பெற்றுக்கொண்ட கடன்தொகையை மறுசீரமைப்பதில் சர்வதேச நாணய நிதியம் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும். கடன்மறுசீரமைப்பு விடயத்தில் நிபந்தனைகளுக்குட்பட்டு செயற்பட வேண்டிய தேவை கிடையாது” இவ்வாறு விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.