ஊழல் மோசடிகள் நிறைந்துள்ள ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென IMF யிடம் தான் வலியுறுத்தியதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுபேரவை உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சுனில் ஹந்துனெத்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மக்கள் ஆணையில்லாத அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் பலனில்லை. இந்த அரசாங்கம் ஆட்சியில் தொடருமானால் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு கிடைக்கப்போவதில்லை.
உதாரணமாக நாங்கள் ஒரு விடயத்தை கூறலாம் நாடாளுமன்றில் கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தனவை நியமித்துள்ளார்கள். இதனுடாக அரசாங்கத்தின் நோக்கம் தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். நெருக்கடி நிலையிலிருந்து மக்களை கரைசேர்க்க வேண்டும். அதற்காக மக்கள் ஆணையுடன் அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
அதேபோன்று கடன்மறுசீரமைப்பு விடயத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாகவும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பாக IMF இடம் நாம் பிரதானமாக வினவியிருந்தோம்” இவ்வாறு சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.