சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விவாதிப்பதற்கு கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர். இதனையடுத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த 5 ஆம் திகதி நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.