சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமானது சபாநாயகர் தவிர்த்து பிரதி சபாநாயகர் தலைமையில் நடத்தப்படவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விவாதிப்பதற்கு கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்த நாம் மூன்று நாட்கள் கோரியிருந்தோம். ஆனால் எமக்கு 2 நாட்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.
சபாநாயகர் தவிர்த்து பிரதி சபாநாயகர் தலைமையில் விவாதம் நடத்தப்படவேண்டும். பொலிஸ் மா அதிபர் நியமனம் மற்றும் இணையவழிபாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தியமை போன்ற விவகாரங்களில்
சபாநாயகர் அரசியலமைப்பை மீறியுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புரிமைகள் நிலையியற் கட்டளைகளை மீறி செயற்பட்டமை தொடர்பில்
பலருக்கும் அவர்மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது” இவ்வாறு ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.