நடக்கவுள்ள இரு பிரதான தேர்தல்களையும் காலம் தாழ்த்துவதற்கான எந்தவொரு எண்ணமும் தம்மிடம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதுள்ள அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் அரசாங்கமா ? என்பது தனக்கு சந்தேகமாக உள்ளது.
பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என்பன உரிய காலத்தில் நடக்க வேண்டும் என்பதே எமது நிலையப்பாடு.
தேர்தலை காலம் தாழ்த்துவதில் எமக்கு எவ்வித விருப்பமும் இல்லை. இன்று அமைச்சரவையில் இருப்பவர்களில் மிகக் குறைவானவர்களே எம்முடன் இருக்கின்றனர்.
மாத்தறை, காலி, கம்பஹா மற்றும் இரத்தினபுரி போன்ற மாவட்டத்திலுள்ள தலைவர்ளே இன்று எம்முடன் இருக்கின்றனர். மேலும் கெஹலிய ரம்புக்வெல்ல இருந்தார். ஆனால் இன்று அவர் அமைச்சராக இல்லை.
இன்று இருப்பது எமது அரசாங்கம் என அநேகமானவர்கள் நினைத்தாலும், முதல் பாதி மட்டுமே எங்களுடையது. மீதி பாதி வேறொரு இடத்தில் இருக்கிறது.
ஜனாதிபதி தேர்தலை அடுத்து பாராளுமன்ற தேர்தலை நடத்துவார்களாக இருந்தால், அது முறையாக இருக்காது.
ஏனெனில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் ஒரு கட்சி சார்பானவர்கள் மட்டுமே பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்கள்.
மாறாக பாராமன்றத் தேர்தலை நடத்திவிட்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவார்களாக இருந்தால் பாராளுமன்றம் மூன்று தரப்பினரைக் கொண்டிருக்கும்.
நாமும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டதும் சரியானதா என்றுதான் தற்போது யோசிக்கின்றேன்.
தற்போது இருப்பது அரசாங்கம் என்பது எங்களுக்கும் சந்தேகமே” என பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.