எமது ஆட்சியில் IMF உடனான ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்யப்படும் என சுதந்திர மக்கள் கூட்டணியின்
நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்திற்கு செல்லும் போது சர்வதேச நாணயநிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு அறியத்தருமாறு ஜனாதிபதியிடம் நாம் கோரியிருந்தோம்.
ஆனால் அரசாங்கம் அப்போது அதனை செய்யவில்லை. அதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. தற்போது அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளதுடன் நாட்டில் வரியையும் அதிகரித்துள்ளது.
மத்திய வங்கியை சுயாதீனபடுத்தியுள்ளது. இதனூடாக மத்திய வங்கி ஆளுநர் தன்னிச்சையாக தீர்மானங்களை மேற்கொள்கின்றார். தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் வேலைத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியது. அத்துடன் மக்கள் மீது அதிக சுமையை சுமத்தியுள்ளது.
தற்போது அதில் எதிர்த்தரப்பினரையும் உள்வாங்க திட்டமிடுகிறது. எனவே அரசாங்கத்தின் சூழ்ச்சி வலைக்குள் சிக்க நாம் விரும்பவில்லை. எமது நாட்டிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் அவசியமாகின்றது.
ஆயினும் ஒரு சில நிபந்தனைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்ற உலகின் ஏனைய சில நாடுகள் நிபந்தனைகளை மீள் பரிசீலனை செய்துள்ளன. ஆனால் இலங்கை அவ்வாறு செய்யவில்லை. தேர்தல் ஒன்றுக்கு செல்லும் போது மக்கள் சில தீர்மானங்களை அறிவிப்பார்கள். எமது ஆட்சியில் மக்கள் ஆணையுடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்யப்படும்” இவ்வாறு டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.