இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கடந்த 75 நாட்களில் 9 பேர் அம்மை நோயினால் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை உயர்வடைந்து காணப்படுவதால் அங்கு அம்மை நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
அந்தவகையில் கடந்த 75 நாட்களில் மாத்திரம் அம்மை நோயினால் குழந்தைகள் உட்பட 6,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கடந்த ஆண்டு மாத்தரம் அம்மாநிலத்தில் 26,363 பேருக்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் தொற்று பாதிப்புக்குள்ளான ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு இந்நோய் பரவுகிறது என்றும் இந்த வைரஸ் காற்றின் மூலமாகவும் பரவுகிறது என கேரளத்தின் இந்திய மருத்துவ சங்கத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் வைத்தியர் ராஜீவ் ஜெயதேவன் குறிப்பிட்டுள்ளார்.