அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் ஆதார வைத்தியசாலை குறித்து பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் அங்கு வைத்திய சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நோயாளிகள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அரச வைத்தியர் சங்கத்தினர் நோயாளிகளின் மீது கருணை கொண்டு மீண்டும் வைத்தியசாலையில் வைத்திய சேவைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலிலில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிர் இழந்ததைத் தொடர்ந்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மருத்துவர்களின் அசமந்த போக்கே காரணம் என தெரிவித்து கடந்த திங்கட்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணிவரை பிரதான வீதியினை மறித்து மாணவர்கள் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்ததுடன் வைத்தியசாலையில் பெயர் பலகை மற்றும் வைத்தியசாலையின் கண்ணாடிகளும் சேதப்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து வைத்தியர்கள் தமக்கு பாதுகாப்பு இல்லையென தெரிவித்து ஒரு வாரமாக பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.