முழுமையான தேர்தல் பத்திர விபரங்களை வெளியிடாதது ஏன்? என SBI யிடம் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் முழு விபரங்களையும் வெளியிடுமாறு SBA எனப்படும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவில், பத்திரங்களை வாங்கியவரின் பெயர், தொகை, வாங்கப்பட்ட திகதி, எந்த கட்சி அதை பணமாக்கியது உள்ளிட்ட விபரங்களை கடந்த 12 ஆம் திகதிக்குள் சமர்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
குறித்த விபரங்களை, தலைமை தேர்தல் ஆணையகம் மார்ச் 15 ஆம் திகதிக்குள் தங்கள் இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, தேர்தல் பத்திர விபரங்களை தலைமை தேர்தல் ஆணையகத்திடம் SBI சமர்ப்பித்ததையடுத்து, அந்த விபரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணைகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில், கடந்த 11 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், திருத்தம் கோரி தலைமை தேர்தல் ஆணையகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
அதன்படி, குறித்த மனு இன்று (மார்ச் 18) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் SBI யிடம் இவ்வாறு கேள்வியெழுப்பினர் :
SBI முழுமையான தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடாதது ஏன்?. முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும் என தெளிவாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீரப்பை நடைமுறைப்படுத்துவதில் எஸ்.பி.ஐ. க்கு என்ன தயக்கம்?.
அரசியல் கட்சிகள் வழங்கிய விபரங்களை சீலிட்ட கவரில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பாக SBI வங்கி அளித்துள்ள விளக்கம் திருப்தி அளிக்கவில்லை. தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் SBI வங்கி நேர்மையாக இருக்க வேண்டும்.
தீர்ப்பை செயற்படுத்துவதில் SBIவங்கியின் அணுகுமுறை நியாயமானதாக இல்லை. தேர்தல் பத்திர விவரங்களை எந்த பார்மெட்டில் வங்கி பாதுகாத்து வைத்துள்ளது?. என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையிலேயே, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் வெளியிட்டு மார்ச் 21 ஆம் திகதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யபடவேண்டும் என SBI க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.