தேர்தல்கள் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் முரண்பாடான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதுவும், இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக கருதப்படுகின்ற நிலையில் முதலில் ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத்தேர்தலா என்பதில் ஆளும் தரப்பினருக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் பொதுஜன பெரமுன கட்சியினர் முதலில் பொது தேர்தலை கோருகின்றனர்.
இந்த நிலைப்பாடுகள் தொடர்பாக கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான கலந்துரையாடல் ஒன்றின் மூலம் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தைரியமாக சவால்களை ஏற்றுக்கொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய ஒருவரே பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார் எனவும், நாட்டை நேசிக்கும் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தாம் தயார் என்றும் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்திருக்கின்றார்.
மேலும், நாட்டில் குழப்பம் விளைவிக்கும் தரப்பினருடன் தாம் ஒரு போதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்பதுடன், தேர்தலில் வெற்றிபெறுவதும் தோல்வியடைவதும் மக்களின் தீர்ப்பிலேயே தங்கியுள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டினை ரோஹித்த அபேகுணவர்தன வெளிப்படுத்தியிருக்கின்றார்.
இந்நிலையில், தேர்தலை சந்திப்பதற்கு அரசாங்கம் பல நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதுடன், முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பெசிலும் மஹிந்தவும் கூறிவருவதாகவும், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்வை கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று புறக்கணித்து வருவதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன், நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற போது ரணில் விக்ரமசிங்க நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாட்டு மக்களை பாதுகாப்பாக கரைசேர்ப்பதாக வாக்குறுதி வழங்கினார் எனவும், ஆனால் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்கையில், சுதந்திர மக்கள் கூட்டணி சார்பாக போராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும், எனவே இந்த வருடம் நடத்தப்பட வேண்டிய ஜனாதிபதித் தேர்தலை எந்தவொரு காரணத்திற்காகவும் அரசாங்கம் பிற்போட முடியாது என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.
ஜூலை மாதம் நடுப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட வேண்டும் என்பதுடன், அதற்கான ஆயத்தப் பணிகளை ஜூலை மாத நடுப்பகுதியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். நாட்டின் அரசியலமைப்பை எவராலும் மாற்றமுடியாது என்ற கருத்தினைப் பதிவுசெய்துள்ளார்.
இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இடைக்கால ஜனாதிபதி ஒருவருக்கு ஒரு வருடம் மாத்திரம் வழங்கப்பட்டால் போதுமானது எனவும், தற்போது அந்த கால எல்லை கடந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நாட்டில் தற்போது இடைக்கால ஜனாதிபதியின் ஆட்சியே தொடர்வதால், புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அத்துடன், தற்போதைய நாடாளுமன்றுக்கும் மக்கள் ஆணை இல்லை எனவும், ஜனாதிபதி தேர்தலை எந்தக் காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டுமென்பதுடன், நாடாளுமன்றம் உள்ளுராட்சி மன்றங்கள் ஆகியன புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கின்றார்.
மேலும், இந்த வருட இறுதிக்குள் இவற்றைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் நாடாளுமன்றத் தேர்தலை அடுத்த வருடம் நடத்த முடியும் என்பதையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஆகவே அனுரகுமார திசாநாயக்கவினது நகர்வுகள், பசிலின் வருகை, பொதுஜன பெரமுனவின் ஆதரவு, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சிலர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்லவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் உள்ளிட்டவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினது தேர்தல் நடவடிக்கைகளில் எவ்வாறு தாக்கம் செலுத்தப் போகின்றன என்பதைச் சற்றுப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இந்நிலையிலேயே முதலில் ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாராகுமாறு அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள விடயமானது நாடாளுமன்றத்தைக் கலைக்கும் நோக்கமாகவும் இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.