பிரித்தானிய இளவரசியின் மருத்துவ ஆவணங்களை சோதித்து, அவரின் பிரச்சினை குறித்து அறிந்துகொள்ள முயற்சி செய்ததாக சந்தேகிக்கப்படும் மருத்துவமனை ஊழியர்கள் மூன்று பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு, லண்டன் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் தொடர்பில் தனியுரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் மருத்துவமனை ஊழியர்கள் மூவரே இவ்வாறு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவியாகிய இளவரசி கேட், ஜனவரி மாதம், உடல் நலம் பாதிக்கப்பட்டு, லண்டன் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இளவரசிக்கு புற்றுநோய் தொடர்பான பிரச்சினை அல்ல என்று மட்டுமே பக்கிங்காம் அரண்மனை தெரிவித்திருந்தது. ஆனால், அவருக்கு என்ன பிரச்சினை என்றோ, அவருக்கு என்ன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றோ தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இளவரசி கேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், மருத்துவமனை ஊழியர்களில் சிலர், இளவரசியின் மருத்துவ ஆவணங்களை (medical records) சோதித்து, அவருக்கு என்ன பிரச்சினை என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்ததாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
உடனடியாக, மருத்துவமனையை நிர்வகிக்கும் மூத்த அலுவலர் ஒருவர், அந்த விடயம் குறித்து பக்கிங்காம் அரண்மனைக்கு தெரியப்படுத்தியதாகவும், அந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததாகவும் அந்த ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இளவரசியின் மருத்துவ ஆவணங்களை சோதித்து, அவருக்கு என்ன பிரச்சினை என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்ததாக சந்தேகிக்கப்படும் மருத்துவமனை ஊழியர்கள் மூன்று பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றக.