உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தினை தொடர்ந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு இன்று அவர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய பீட பிரதிப் பதிவாளர் நாரங்கபானவே ஆனந்த தேரரின் ஆசிகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்ததாவது” முன்னாள் ஜனாதிபதியின் அறிக்கையின் பிரகாரம்
குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருடன் கலந்தாலோசித்து அவரது பாதுகாப்பு தொடர்பில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களினூடாக வெளியிட்ட அறிக்கையைப் பார்த்து அவரைக் கைது செய்யுமாறு
சிலர் முன்வைக்கும் கோரிக்கைகளில் எவ்வித அடிப்படையும் இல்லை. மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் கைது செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவ்வாறானதொரு தீர்மானத்தை அப்போதே எடுக்க முடியும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிக்கையை சாதகமாகப் பார்க்க வேண்டும். குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் குறித்த உண்மைத் தகவல்கள் தெரிந்தால் விசாரணை நடத்தி உரியவர்களைக் கைது செய்ய முடியும்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பில் மைதிரிபால சிறிசேன நீதிமன்றத்திற்கும் சட்டமா அதிபருக்கும் அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என நாம் எதிர்பார்க்கின்றோம்” இவ்வாறு பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.