ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சிக்குமானால் அதனை எதிர்பதற்கு தாம் தயாராக உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கனடாவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இலங்கையில் தேசிய தேர்தலை தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதிகாரத்தை இழக்கப்போகின்றோம் என்ற அச்சம் காரணமாகவே அவர்கள் இவ்வாறு செய்கின்றனர்.
அதிகாரத்தை மக்களின் கரங்களில் ஒப்படைப்பது குறித்து அவர்கள் அஞ்சுகின்றனர். பசில் ராஜபக்சவும் அவரது குழுவினரும் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிடுகின்றனர். ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் குறிப்பிட்ட ஆசனங்களை தங்களால் கைப்பற்ற முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.
எனினும் இலங்கையின் அரசமைப்பின் படி நாடாளுமன்றம் தனது ஆயுள்காலத்தின் இரண்டரை வருடங்களை பூர்த்தி செய்த பின்னர் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்கலாம். ஆனால் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் அதனை கலைக்க முடியாது.
2010- 2015 – 2019 ஆகிய ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் 113 ஆசனங்களை பெறதவறினால் கூட்டணி அமைக்க தகுதியானவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க நாம் தயார் எங்களால் 105 ஆசனங்களை பெற முடிந்தால் மக்கள் எங்களை ஏற்றுக்கொள்ள தயார் என்பதே அர்த்தம். இதனால் எங்களால் இணைந்து செயற்படமுடியும் என நாங்கள் கருதும் தனிநபர்களுடன் இணைந்து செயற்படுவோம்” இவ்வாறு அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.