”ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணி தொடர்பாக புதிய கதைகளை வெளியிடாமல் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
அம்பலாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”விசாரணைகளுக்காக பொதுவான ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு பதிலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களை ஈடுபடுத்துவது சிறந்தது. வெளிப்படையான மற்றும் நேர்மையான விசாரணையை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம்.
தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாந்து யார்ட் பொலிசாரை அழைத்து விசாரணைகளை நடத்துவதாக கூறியிருந்த போதிலும் இதுவரையில் அதற்கான எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடுவதில் அவருக்கு நாட்டமில்லை என தோன்றுகிறது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மூடி மறைக்கின்றமை மற்றும் ஈடுபாடு காட்டாமை என்பன பல கேள்விகளையும், சிக்கலையும் இன்று நாட்டில் தோற்றுவித்துள்ளது” இவ்வாறு எதிர் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.