கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாகவும் பிரதேச மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
பிரதேச மக்கள் நேற்று காலை தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக பொதுமக்கள் பல்வேறு பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை இன்றும் முன்னெடுத்துள்ளனர்.
கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயற்பட்டு வந்த குறித்த பிரதேச செயலகம் 1988களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது. 1993 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வரும் நிலையில், ஒரு சிலரால் குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகள் தொடர்ச்சியாக பிரயோகிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனால் தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படும் வரையில் தமது அமைதிப் போராட்டம் தொடரும் என பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். இதேவேளை கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகம் முன்னெடுத்துள்ள போராட்டம் தேர்தலை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் முஸம்மில் அபூசாலி குறிப்பிட்டுள்ளார்.