உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆங்கில பத்திரையொன்று பிரசுரித்த கட்டுரையொன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த கட்டுரையானது இலங்கை – இந்தியாவுக்கிடையிலான இராஜதந்திர உறவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அது தொடர்பில் பிரபல ஆங்கில பத்திரிகையொன்றின் அரசியல் கட்டுரையில், மைத்திரி இந்தியாவிலுள்ள பிரபல இராஜதந்திரயொருவர் தொடர்பிலேயே தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போனமையே இதற்கான காரணமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறெனில் இதுவரை இந்த தாக்குதல்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு என்னவானது?
இதன் மூலம் யாருக்கு வெள்ளையடிப்பு செய்வதற்கு முயற்சிக்கப்படுகிறது? புதிதாக வெளிவரும் இந்த அரசியல் சூழ்ச்சி என்ன?
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இவ்வாறானதொரு செய்தி வெளியிடப்பட்டுள்ளமையை, இரு நாடுகளுக்கிடையில் முரண்பாடுகளை தோற்விக்கும் செயலாகவே நாம் பார்க்கின்றோம்.
இதுவரைக் காலமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, 100 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான செய்தி வெளியாகியுள்ளது. எவ்வாறிருப்பினும் இன்னும் சில மாதங்களில் உதயமாகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பாதிக்கப்பட்டோருக்கு நிச்சயம் நீதி வழங்கப்படும்” இவ்வாறு ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.