பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிப் பத்திரத்தை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்தது.
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கல் எனும் பெயரிலான குறித்த முன்மொழிவை நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார். குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையில் இல்லாத பெருந்தோட்ட தொழில் முயற்சி மறுசீரமைப்புக்கள் இராஜாங்க அமைச்சின் ஒத்துழைப்புடன் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் பெருந்தோட்ட வலயத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்களில் வாழும் 4,151 பயனாளிகள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
அத்தோடு, குறித்த குடும்பங்கள் தற்போது வசிக்கின்ற காணிக்களுக்கான உறுதிப் பத்திரத்தை வழங்குவதற்காக ஜனாதிபதி மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.