விவசாயத் துறையுடன் தொடர்புடைய அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் விவசாய அமைப்புக்களை மறுசீரமைப்புச் செய்வதனை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விவசாய நவீன மயமாக்கல் சபையொன்றை நிறுவ உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பிலான மீளாய்வுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட கொள்கைத் திட்டம், அதனை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் காமினி சேனாநாயக்கவினால் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
இந்த விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 25 மாவட்டங்களின் 26 பிரதேச செயலகப்
பிரிவுகளிலிருந்து 26 திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு அவற்றுக்கான முன்னோடித் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில், நெல் மற்றும் ஏனைய விவசாய பயிர்கள், பால் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத்தின் பலதரப்பட்ட அம்சங்களையும் நவீனமயப்படுத்தல் மற்றும் மேம்படுத்துதல் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
பயிர்ச்செய்கைக்காக 5 இலட்சம் ஏக்கர் நிலத்தை விடுவித்தல் மற்றும் இலங்கையில் உள்ள விவசாயிகளை நவீன விவசாய நுட்பங்களில் ஈடுபடுத்தும் திட்டம் குறித்தும் ஆராயப்பட்டது. மேலும், காலநிலை மாற்றங்களின் போதான, நீர் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும், அதற்காக நாட்டில் சிறந்த திட்டமொன்றை செயற்படுத்த வேண்டிதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
அத்துடன், விவசாயிகளின் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்குதல், விவசாய
நவீனமயப்படுத்தலுக்கு அவசியமான நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் ஊக்குவித்தல் போன்ற சவால்கள் குறித்தும், நவீன விவசாய முயற்சிகளில் ஈடுபட விரும்பும் இளைஞர்களை வலுவூட்டுவது தொடர்பிலான விடயங்கள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.