அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் அப்புறப்படுத்தி தமது கால்நடைகளை வளர்ப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படுத்தி தருமாறுகோரி மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையிடம் மீண்டும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை காணி பிரச்சினைக்குரிய தீர்வினை காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று மட்டக்களப்பு, சித்தாண்டியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை காணியை மீட்டுத்தருமாறு சித்தாண்டியில் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றைய தினம் 203 நாட்களை கடந்து முன்னெடுக்கப்படுகிறது.
இந்தநிலையில், இந்த பிரச்சினைக்கான தீர்வினை காணும் வகையில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கு அமைவாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பன இணைந்து மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் மற்றும் கமநல அமைப்பினை சந்தித்து இதன்போது பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய முகாமையாளர் டபிள்யு எம்.சுகத் வீரசிங்க, பிரதி திட்டமுகாமையாளர் பிரபாத் பத்தேகம, ஏறாவூர்ப்பற்று உதவி பிரதேச செயலாளர் என்.பிருந்தன் மற்றும் கால்நடை பண்ணையாளர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.