அனைத்து இன மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, முன்னேற்றகரமான இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் தங்களுக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க கேட்டுக் கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இன,மத, மொழி கடந்து ஒற்றுமையுடன் நாம் பயணிக்கும்போதே இந்த நாட்டை முன்னேற்ற முடியும். வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் ஆணையில்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது. இம்முறை அனைவரினதும் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க வேண்டும்.
எனவே, எமக்கான ஆதரவை அனைவரும் ஒருமித்து வழங்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு சகலரது ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் அரசாங்கம் அமைக்கப்படும்போது எந்தவித பாகுபாடுகளுமின்றி ஆட்சி நடைபெறும்.
இதனூடாக நீண்ட காலமாக இருந்து வருகின்ற பிரிவினை அரசியலுக்கு முடிவு காட்டி இன, மத பேதமில்லாத ஒன்றிணைந்த அரசியலை மேற்கொள்ள முடியும்.
இந்த பயணத்தில், அனைவரும் எம்முடன் இணைய வேண்டும். அனைவரும் சம உரிமைகளுடன் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழக் கூடியதான ஆட்சி அமையப் பெறுவதற்கு எமக்கான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு நான் தமிழ் தலைவர்களிடன் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.