கடந்த 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 200 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரங்கள்) ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுகின்றது.
இதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 200 பில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆண்டு பாடசாலைச் சிறுவர்களுக்கான உணவுத் திட்டம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவித் திட்டம், ஏழைக் குடும்பங்களுக்கு இலவச 20 கிலோகிராம் அரிசி வழங்கும் திட்டம் ஆகியவற்றை அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது.
ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட “லிய சவிய” கடன் திட்டத்தின் கீழ் 12% வட்டிக் கடன் சுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மகளிர் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டன. இதேவேளை நிவாரணத் திட்டத்திற்காக உலக வங்கி 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. அதனை 05 வருட அவகாசத்துடன் 30 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.