பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு கிடைக்கப்பெறும் அதிகளவிலான பொருட்களை தாமதமின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மத்திய தபால் பரிவர்த்தனைக்கு இந்த புத்தாண்டுக் காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பொருட்கள் வந்தடைந்துள்ளன.
வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிக அளவில் பொருட்களை அனுப்பியுள்ளனர். புத்தாண்டு காலம் என்பதால் அந்த பொருட்களை துரிதமாக விநியோக்க வேண்டிய சவால் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக ஏப்ரல் 12 ஆம் திகதி பொது விடுமுறையாக இருந்தாலும் அன்றைய தினம் சேவைக்கு சமூகமளிப்பதற்கு தபால் மா அதிபர் மற்றும் தபால் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். சுங்கத் திணைக்கள் அதிகாரிகளும் அதற்கான ஒத்துழைப்பை வழங்கவுள்ளனர் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.