”ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க யானை சின்னம் அல்லாத வேறு ஒரு சின்னத்திலேயே போட்டியிடுவார்” என ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான பிரதானி ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் இடம்பெறாது எனவும் அவ்வாறு நடத்தவும் முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் காலத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவேண்டும் எனவும் பொதுத் தேர்தலுக்கு செல்ல இன்னும் காலம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது உறுதியானது எனவும் ஆனால், அவர் பொது வேட்பாளராக போட்டியிடுவதால் யானை சின்னத்தில் அல்லாமல் வேறு ஒரு சின்னத்திலேயே போட்டியிடுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் நடவடிக்கையின் அடித்தள நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதில் அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொள்வதே தங்களின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த 80 வீதமானவர்களின் ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இருப்பதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளதாகவும் ஆஷூ மாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய, சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற்றவரான ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே தங்களின் இலக்கு எனவும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சஜித் பிரேமதாசவும் மீண்டும் எம்முடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை எனவும் அவர் கூறினார்.